பேரறிவாளன் விடுதலை பெரும் வரை, அவரது சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு தான்செய்யாத குற்றத்திற்காகக் கால்நூற்றாண்டுக்கு மேலாகச் சிறையில் வாடிவரும் என்னுயிர் தம்பி பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் வைத்திருக்கும் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிக்க வேண்டியது தமிழக அரசின் இன்றியமையாத கடமையாகும். அதற்காக அவர் முன்வைக்கும் காரணங்கள் மிக மிக நியாயமானவையாகும்.
26 ஆண்டுகளாய் சிறையில் இருந்த பேரறிவாளன் சிறைக்சாலையையே பல்கலைக்கழகம் போல மாற்றி, ஒரு பேராசிரியாரைப்போல மற்ற கைதிகளுக்குக் கல்வி கற்பித்திருப்பதும், ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் மற்ற கைதிகளுக்கு முன்மாதிரியாகவும். சிறைக்குள்ளேயே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருப்பதும், மற்ற கைதிகளும் பட்டம் பெறுவதற்கு ஊக்கமளித்து ஊன்றுகோலாய் விளங்கியிருப்பதும், கால்நூற்றாண்டுச் சிறைவாசத்தில் ஒரு சிறுபிழைகூடக் காண முடியாதவகையில் சிறைவிதிகளையும், மரபுகளையும் கடைபிடித்திருப்பதும் நாடே அறிந்ததுதான்.
19 வயதில் சிறைப்பட்ட பேரறிவாளன், தனது இளமை காலங்களையெல்லாம் சிறைக்குள்ளே தொலைத்துவிட்டு இன்னும் நீதியையும் சட்டத்தையும் நம்பிப் போராடிக்கொண்டிருக்கிறார். பேரறிவாளனும், அவரது தாயாரும் முன்னெடுத்த 26 ஆண்டுகாலப் போராட்டத்தினாலும், தந்தை குயில்தாசனின் உடல்நலனைக் கருத்திற்கொண்டும் தமிழக அரசு இரு மாதங்கள் சிறைவிடுப்பு வழங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
சிறைவிடுப்பு என்பது ஒரு சலுகை அல்ல; அது ஒரு சிறைவாசியின் தார்மீக உரிமை. தந்தையின் உடல்நிலை முழுமையாகக் குணமாவதற்குள்ளேயே பேரறிவாளனுக்கு விடுப்பு நாட்கள் முடிவடைவது வருத்தமளிக்கிறது. தந்தையைப் பிரிந்து பேரறிவாளன் சிறை திரும்பும் சூழல் ஏற்பட்டால் அது அவரது தந்தைக்குத் தாங்கொணாத் துயரத்தையும், மிகப்பெரிய மனச்சோர்வினையும் உண்டாக்கி உடல்நலனுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
எதற்காகத் பேரறிவாளனுக்கு விடுப்பு தரப்பட்டதோ? அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருப்பதால் சிறைவிடுப்பைத் தமிழக அரசானது நீட்டிக்கச் செய்வதுதான் இந்நேரத்தில் முன்னெடுக்கிற சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும். அப்போதுதான், ஏழு தமிழரின் விடுதலைக்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப்போராட்டம் நடத்திய அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர்வதாகக் கூறுவது சாலப்பொறுத்தமாய் இருக்கும்.
161_வது சட்டப்பிரிவினைப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்யும் வரலாற்று வாய்ப்பு தமிழக அரசின் பொற்கரங்களில் தான் இன்னும் இருக்கிறது என்பதனையும் நினைவூட்டி, விடுதலையடையும் வரை தம்பி பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக் கோருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.