தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர் வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Last Updated : Jan 14, 2020, 06:04 PM IST
தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர் வைத்தீஸ்வரன் கோவில் title=

வைத்தீஸ்வரன் கோவில் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. 

தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது.

நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய்.

எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம்.

சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம்.
 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News