குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்: PMK கோரிக்கை

குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Updated: Jun 4, 2019, 12:45 PM IST
குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்: PMK கோரிக்கை

குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மழை குறைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் சொல்லிக்கொள்ளும்படியாக தண்ணீர் கிடைக்கவில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 46 அடியாக உள்ள நிலையில், அணைக்கு குறிப்பிடத்தக்க அளவில் நீர் வராததால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது சாத்தியமற்றதாகியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், கர்நாடகமும், இயற்கையும் செய்த துரோகம் காரணமாக கடந்த 2011-ஆண்டுக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக   மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அதனால்  கடந்த 7 ஆண்டுகளாகவே காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி இயல்பான பரப்பளவில் நடைபெறவில்லை. வழக்கமாக காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்தது 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில்  குறுவை சாகுபடி நடைபெற்ற நிலைமை மாறி இப்போது அதிகபட்சமாக ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில்  குறுவை சாகுபடி நடப்பதே அதிசயமாகிவிட்டது. இந்த அளவுக்கு சாகுபடி நடைபெறுவதற்குக் கூட  தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குறுவை தொகுப்பு சிறப்பு உதவித் திட்டம் தான் காரணமாகும்.

மேட்டூர் அணையில் குறைந்தது 90 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டும் தான் குறுவைக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், மேட்டூர் அணையில் 46 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளில் இன்றைய நிலவரப்படி 13.92 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் உள்ளதால் அங்கிருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், அடுத்த சில வாரங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்தால் மட்டும் தான் அடுத்தடுத்த மாதங்களில் அணைகள் நிரம்பும் பட்சத்தில், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முடியும். ஆனால், இப்போதுள்ள சூழலில் அதற்கு யாராலும் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

ஆகஸ்ட் மாத முதல் வாரத்திற்கு முன்பாக குறுவை சாகுபடி செய்யப்பட்டால் தான் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக அறுவடை செய்ய முடியும். தாமதமாக குறுவை நடவு செய்யப்பட்டால் குறுவை பயிர்கள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது. மேற்கண்ட அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.

நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் தடையற்ற மின்சாரம், உரம், விதைகள், ஜிப்சம், நுண்ணூட்டச்சத்து ஆகியவற்றுக்கான மானியங்களும் வழங்கப்படும் என்பதால் இத்திட்டம் உழவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று காவிரி பாசன மாவட்ட உழவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் குறுவைத் தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், இந்த ஆண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.