தமிழை அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது: வைரமுத்து ஆவேசம்!

தமிழகத்தில் நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

Updated: Feb 14, 2018, 10:26 AM IST
தமிழை அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது: வைரமுத்து ஆவேசம்!

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநில நீதிமன்றங்களில்‌ இந்தியில் தீர்ப்பு சொல்லும்போது, மூவாயிரம்‌ ஆண்டுகள் பழமையான தமிழகத்தில் மட்டும் தமிழில் தீர்ப்பு சொன்னால் ஆகாதா என்று  கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மறைமலை‌ அடிகள் குறித்த ஆய்வு கட்டுரையை அரங்கேற்றம் நடைபெற்றது. இதில், கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய போது கவிஞர் வைரமுத்து;-

நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. குடியரசுத் தலைவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

அதில், தாய் மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்திய பின்னும் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது என்று கூறினார். 

மேலும் அவர், தமிழ்மொழிக் கொள்கையை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு வைரமுத்து வலியுறுத்தினார்.