குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, மத்தியில் நடைபெறும் ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்படும் என அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசின் இந்த முடிவையடுத்து, மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழலும் விளக்குகளை அகற்றி வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது காரில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:-
மத்திய அமைச்சரவை முடிவையடுத்து தனது வாகனத்தில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதாக தெரிவித்தார். விரைவில் அமைச்சர்களும் தங்கள் கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவார்கள் என்றும் கூறினார்.