போடி, தேனி: 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதியம் மூன்று மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதுவரை கிடைத்த தகவல்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் (Namakkal) மாவட்டத்தில் 59.73 சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 46.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் (Tamil Nadu Election Commission) தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் (OP Ravindranath) கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் தங்கள் வாக்கை வாக்குச்சாவடியில் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக சரிசெய்யப்பட்டு, தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவுக்கு மத்தியில், வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், இரட்டை இலை (AIADMK Symbol) சின்னத்தில் விளக்கு எரிவதாக எழுந்த புகாரை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சோதனை செய்ததில், அது சரியாக வேலை செய்கிறது என்றும், வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் திருப்பூர் ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்
ALSO READ | எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு என புகார்
தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் (OP Ravindranath) கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இவர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.பி. இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
என் கார் மீது திமுகவினர் தான் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என எம்.பி. ரவீந்திரநாத் குற்றம்சாட்டி உள்ளார். இவர் தனது தந்தை போட்டியிடும் போடி தொகுதிக்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு திமுகவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த அதிமுக (AIADMK) மற்றும் திமுகவினர் (DMK) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு அணியினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் இரு தரப்பில் இருந்தும் கற்களை வீசப்பட்டதால், அங்கிருந்த எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தற்போது அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அவர்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இன்று காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR