கேரள தலைவர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் சந்திப்பு!

மூத்த தலைவர், வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்!

Last Updated : Mar 21, 2018, 08:00 PM IST
கேரள தலைவர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் சந்திப்பு! title=

கேரள மாநில நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர், முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (21.3.2018) மாலை 5 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்!

தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, அங்கே இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க உள்ளது. இந்த வகையில் உலகத்தில் அமைக்கப்படுகின்ற மிகப்பெரிய ஆய்வுக்கூடம் இதுவாகத்தான் இருக்கும்.

பாறைகளைக் உடைப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால், அருகில் உள்ள கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்; அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள்; அமெரிக்காவில் உள்ள ~பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். இங்கிருந்து, உலகில் எந்த நாட்டில் உள்ள அணு ஆயுதங்களையும் வெடிக்கச் செய்யலாம்; செயல் இழக்கச் செய்யலாம். உலகில் அணு ஆயுதப் போர் எந்தப் பகுதியில் மூண்டாலும், தேனி மாவட்டம் அம்பரப்பர் ஆய்வகம்தான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். கேரள மாநிலம், தென் தமிழ்நாடு அழிந்து போகும்.

இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழக்குத் தொடுத்தார். எனினும் இத்திட்டத்தினை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு துடிக்கின்றது.  எனவே, இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டுவதற்காக, மார்ச் 31 ஆம் தேதி காலையில், மதுரையில் இருந்து விவசாயிகள், இளைஞர்கள், தொண்டர்களோடு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின்
சார்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடைபயணம் மேற்கொள்ளுகின்றார். வழிநெடுகிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, ஏப்ரல் 9 ஆம் தேதி கம்பத்தில் நடைபயணம் நிறைவு பெறுகின்றது.

மார்ச் 31 ஆம் நாள் மதுரையில் நடைபயணத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து மூத்த தலைவர், வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிந்திப்பிற்கு பின்னர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், உள்துறை முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா அவர்களை, அவரது வீட்டில் வைகோ சந்தித்தார். இந்த நடைபயணத்தின் நிரைவு நிகழ்ச்சியில் ரமேஷ் சென்னிதலா அவர்கள் கலந்துக்கொள்ள வேண்டமாய் அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: MDMK THAYAGAM

Trending News