ரெனோ : குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் இருநாட்களே இருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டுவரும் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் டிரம்ப்பைவிட அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முதல் ஐந்து சதவீதம்வரை வெற்றிவாய்ப்பு மிக்கவராக காணப்படுகிறார். இந்த சரிவை சமன்செய்யும் வகையில் டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள நெவேடா மாநிலத்தில் உள்ள ரெனோ நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்தபோது திடீரென்று மேடையில் தோன்றிய அவரது ரகசிய போலீசார், டிரம்பின் மறைத்தபடி அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்றனர். அதற்குள், மேடைக்கு எதிரே இருந்த ஒருவனை அங்குள்ள போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அந்த நபர் துப்பாக்கியுடன் பிரசார கூட்டத்துக்கு வந்து டிரம்பை கொல்ல முயன்றதாக போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. கைது செய்யப்பட்டு அந்த நபரை வேனில் ஏற்றியபின்னர், டொனால்ட் டிரம்ப் தனது பேச்சை தொடர்ந்தார்.