Pakistan Crisis: பிரதமர் வேட்பாளர் ஷாபாஸ் ஷெரீப் முன் உள்ள சவால்கள்

PML-N தலைவர் ஷாபாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்கக் கூடும் என்ற நிலையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள்வதைத் தவிர, அவர்கள் முன் இருக்கும் சவால்கள் அதிகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2022, 10:26 AM IST
  • பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது.
  • அமெரிக்காவை நம்ப வைப்பது எளிதல்ல.
  • இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசி வந்தார்.
Pakistan Crisis: பிரதமர் வேட்பாளர் ஷாபாஸ் ஷெரீப் முன் உள்ள சவால்கள்  title=

பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, பொருளாதார அமைப்பு சீர்குலைந்து வருகிறது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பிஎம்எல்-என்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் திங்கள்கிழமை பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கக்கூடும் நிலை உருவாகியுள்ளது. 

ஆனால், ஷாபாஸ் ஷெரீப்புக்கு இது ஒரு சவாலான பணியாகவே இருக்கும். பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சவால்களை எளிதில் சமாளிப்பது இல்லை. பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கையாள்வது ஷாபாஸ் ஷெரீப்பின் முன் மிகப்பெரிய சவாலாக இருக்கும். பாகிஸ்தான் பிரதமரான பிறகு, ஷெரீப் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிதைந்து வரும் பொருளாதாரம்

பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) தரவுகளைப் பார்த்தால், அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு வாராந்திர அடிப்படையில் 6.04% குறைந்து வருகிறது. ஏப்ரல் 1, 2022 நிலவரப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் 1,1319.2 மில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டுள்ளது என வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த இருப்பு ஜூன் 26, 2020க்குப் பிறகு மிகக் குறைந்த அளவிற்கு சென்றுள்ளது. வர்த்தக பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், பாகிஸ்தானின் மொத்தக் கடன் 5,272 கோடி பாகிஸ்தான் ரூபாயை விட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு 1188 கோடி பாகிஸ்தான் ரூபாயை ஐஎம்எஃப் கடனாக வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: இம்ரான் கான்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்

பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவு பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகு பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதன் தாக்கம் தற்போது சாமானியர்களை பாதிக்க துவங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதும் இம்ரான் கானுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு காரணம். இத்தகைய சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும்.

இராணுவத்துடன் நல்லிணக்கம்

பாகிஸ்தானின் அரசாங்கத்தை அமைப்பதிலும், அதை வீழ்த்துவதிலும் இராணுவத்தின் பங்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஷாபாஸ் ஷெரீப்பைப் பொறுத்தவரை, இந்த பிரச்சினை மேலும் வலுவானது. இராணுவத்துடன் ஷாபாஸின் கட்சி உறவுகள் எப்போதும் நன்றாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, ​​ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஷாபாஸுக்கு இராணுவத்துடனான தனது உறவை மேம்படுத்துவது சவாலாக இருக்கும்.

இந்தியாவுடனான உறவு

இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு தொடர்ந்து மோசமடைந்தது. இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசி வந்தார். அவரது பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் கசப்பானதாக்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவுகள் மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக நவாஸ் ஷெரீப் இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் இருந்தார். ஷர்பாஸ் ஷெரீப் இப்போது பழைய உறவுகளை வலுப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும்

அமெரிக்காவை நம்ப வைப்பது எளிதல்ல

ஒரு காலத்தில் பாகிஸ்தானின் சிறந்த நண்பர்களில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது. பாகிஸ்தானுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், அமெரிக்கா எப்போதும் அதற்கு துணை நின்றது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான கட்டத்தை கடந்து செல்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் பாகிஸ்தானும் கிட்டதட்ட எதிரிகளாக மாறி விட்டன. உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இம்ரான் கான் சந்தித்த பிறகு, விரிசல் அதிகரித்தது. தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்க உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது ஷர்பாஸ் ஷெரீப்பின் முன் பெரும் சவாலாக இருக்கும்.

மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News