ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் 19-ம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். இருப்பினும் அமெரிக்கா ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் இந்த தீர்மானத்தை நிராகரித்தது.
இதையடுத்து, ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை இன்று கூடியது. அப்போது டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஹாண்டுரஸ், குவெட்டேமாலா, பலுவா, நவுரு, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, தோகோ ஆகிய 9 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 35 நாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.
இதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
128 countries vote in favor of U.N. call for U.S. to withdraw decision to recognize Jerusalem as Israel's capital, 9 countries oppose: Reuters pic.twitter.com/qdWmz9nQer
— ANI (@ANI) December 21, 2017