ஆப்கானிஸ்தான் கோர் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால் தனது 6 வயது மகள் ஹாரிபவுலை. அப்பகுதியில் வசித்து வந்த செய்யத் அப்தோல்கரீம் (வயது-55) என்பவருக்கு வணிக ரீதியான முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.
தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஆடு, அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்றவற்றை அந்த நபரிடம் இருந்து வாங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அருகில் வசிப்பவர்கள் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த 55 வயதுகாரரையும், தந்தையையும் உள்ளூர் பெண்கள் அடித்து உதைத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தந்தையையும், அந்நபரையும் கைது செய்துள்ளனர்.
ஆனால், அந்நபரோ இவள் என்னுடைய மனைவி, தற்போது இவளுடன் நான் எவ்வித உறவும் கொள்ளவில்லை அவளுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் நான் உறவு கொள்வேன், அதுவரை நான் இவளை பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அச்சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தான் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.