உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் டாக்டர் அம்பேத்கர் பெயரின் நடுவில், 'ராம்ஜி' என்ற பெயரைச் சேர்க்க அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி வகித்து வருகிறது. இதுவரை இங்கு டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே அனைத்து அரசு ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தற்போது இதனை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு ஆணை அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், அம்பேத்கர் பெயரில் மாற்றம் செய்வதுகுறித்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், லக்னோ மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டிலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற புதிய பெயரை நடுவில் சேர்க்க முடிவானது. இதில் ராம்ஜி என்பது அம்பேத்காரின் தந்தை பெயர் ஆகும்.
உத்தரப்பிரதேச மாநில கவர்னர் ராம் நாயக்கின் பரிந்துரையில், உத்தரப்பிரதேச அரசு ஆவணங்களில் உள்ள அம்பேத்கரின் பெயரில் 'ராம்ஜி' என்ற புதிய பெயரைச் சேர்த்து, டாக்டர்.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.