Hindenburg Issue: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச்சந்தையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதையடுத்து, அடுத்ததாக, இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியின் தலைவர் மாதபி பூரி புச் (Madhabi Puri Buch) மற்றும் அவரது கணவர் தவல் புச் மீதும் தற்போது குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் முன் வைத்துள்ளது.
ஹிண்டன்பர்க் (Hindenburg) நிறுவனத்தின் ஆய்வறிக்கையால் பல வித சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், மாதபி புச் தன்னால் விசாரணை செய்யப்பட பணிக்கப்பட்ட அதே ஸ்பான்சரின் ஃபண்டுகளில் தனது முதலீடுகளை தொடர்ந்ததாகவும், இது ‘கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட்’, அதாவது அதிகாரத்தை பயன்படுத்தி சொந்த ஆதாயத்தை பெறும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 10 அன்று வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கை
ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செபி (SEBI) தலைவர் மாதபி பூரி புச் பதிலளித்து மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்தது, ஹிண்டன்பர்க் அடுத்த சுற்று தாக்குதல்களை ஆரம்பித்தது. செபி தலைவர், கன்சல்டண்ட் க்ளையண்டுகளின் முழு பட்டியலையும் பகிரங்கமாக வெளியிடுவாரா என்றும் இந்த பிரச்சனைகள் குறித்த வெளிப்படையான அல்லது பொது விசாரணை நடத்தப்படுமா என்றும் ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.
Conflict Of Interest என்றால் என்ன?
ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தின் தொழில்சார் கடமைகள் அல்லது பொறுப்புகளுக்கு அந்த நபர் அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட நலன்களால் பாதிப்பு ஏற்படுவது ‘கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முயலும் சிக்கலான வேளைகளில் இந்த ‘கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட்’ பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபர் அல்லது நிறுவனம் எடுக்கும் முடிவுகளில் மாற்றம் வரக்கூடும், அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் தாக்கம் அவரது முடிவுகளில் பிரதிபலிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட சிக்கல் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் முடிவுகளை எடுப்பதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி கேட்கப்படுவதுண்டு.
Conflict Of Interest: இதற்கு செபி அதன் தலைவர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்காக கொண்டுள்ள நெறிமுறைகள் என்ன
- டிசம்பர் 2008 இல் சிபி பாவே செபியின் தலைவராக இருந்தபோது இந்த குறியீடு அங்கீகரிக்கப்பட்டது. இப்படி ஒரு பொறிமுறைக்கான காரணத்தை குறியீடு விளக்குகிறது. இந்த குறியீடு "தனது ஆணையை நிறைவேற்றுவதற்கான தன் திறனை சமரசம் செய்யாத அல்லது உறுப்பினர்(கள்) தனது பொறுப்புகளை நிறைவேற்றும் திறனில் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாத வகையில் நடத்துவதை உறுதிசெய்வதாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த குறியீடு முக்கியமாக கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட்டையும் வெளிப்படுத்தல்களையும் வலியுறுத்துகிறது.
- கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட் பிரச்ச்னனை எழும் விஷயங்களில் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள நிலையில், அதன் காரணமாக வாரியத்தின் எந்த முடிவும் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று குறியீட்டின் நெறிமுறையின் பொதுவான கொள்கைகள் கூறுகின்றன. உறுப்பினர் தங்கள் கடமைகளுடன் முரண்படக்கூடிய செயல்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
- உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட நன்மைக்காக, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுடனான எந்தவொரு தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவையும் அல்லது அத்தகைய நிறுவனங்களின் எந்தவொரு பணியாளரையும் பயன்படுத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான நெறிமுறைகளுக்கு மாறாக இருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் எந்த ஒரு உறுப்பினரும் முடிவெடுக்க கூடாது, என்றும், இதில் SEBI தலைவரும் அடங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- போர்டு மீட்டிங் நிகழ்ச்சி நிரலில் முரண்பாடுகள் வர வாய்ப்பிருந்தால், வாரியத்தின் கூட்டத்தில் பரிசீலனைக்கு வரும் எந்தவொரு விஷயத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய ஒரு உறுப்பினர் கூட்டத்தில் அந்த விஷயத்தில் தனக்கு உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- பத்திரங்களின் கையிருப்புகளை வெளிப்படுத்துவதற்கான வழிமுறையையும் இந்த கோட் பரிந்துரைத்துள்ளது. ஒரு உறுப்பினர், பணியில் சேர்ந்த 15 நாட்களுக்குள் அவரது பங்குகள் மற்றும் அவர் குடும்பத்தினரின் பங்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், நிதியாண்டு முடிவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அவரது பங்குகள் மற்றும் அவர் குடும்பத்தினரின் பங்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் இந்த கோட் தெரிவிக்கிறது. மேலும், குறிப்பிட்ட மதிப்பிலான பங்கு வர்த்தனைகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
- பத்திரங்களின் இருப்பு மற்றும் அவற்றின் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான தொடர்புடைய வெளிப்பாடுகள் தலைவரால் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளதாக செபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாத்தியமான முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைவர் தன்னைத் தானே விலக்கிக் கொண்டார் என்பதும் தெளிவாகியுள்ளது.
- செபி தலைவரின் பொறுப்பைக் கருத்தில் கொண்டு வாரியத்தின் அதிகாரத்தின் கீழ் தலைவரின் வெளிப்படுத்தல்கள் ஆராயப்படலாம் என்று கோட் கூறுகிறது.
இதற்கிடையில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு இரண்டாவது நாளான இன்று, பங்குச்சந்தையில் ஓரளவு சரிவே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | யார் இந்த மாதவி பூரி புச்? அவரின் சொத்து மதிப்பு மற்றும் இதர விவரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ