21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றனர். இதில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நிறைவு விழாவில் தேசியக் கொடி ஏந்திச் சென்றார்.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்றுத்தந்தனர்.
அதிலும் குறிப்பாக மல்யுத்தத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தலா ஒரு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முறை பல்வேறு எடைப் பிரிவில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர்.
இவர்களில் 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். பொதுவாகவே மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த முறையும் சிறப்பாக விளையாடிப் பல பதக்கங்களை வென்றனர். கலந்துகொண்ட 12 பேரும் ஆளுக்கு தலா ஒரு பதக்கம் வென்றுள்ளனர்.
இதில் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். சுமித், ராகுல், பஜ்ரங், சுஷில் குமார், வினீஷ் போகாத் ஆகியோர் தங்கப்பதக்கமும், காதிரி, பபிதா குமாரி, பூஜா தண்டா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சோம்வீர், சாக்க்ஷி மாலிக், திவ்யா கக்ரன், கிரண் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்த போட்டியில் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. 10-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது.
கடைசி நாளான நேற்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் பதக்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கம். பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் நேற்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் - சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் - மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர். இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.