சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெங்களூரு சாலையோரங்களில் போக்குவரத்து காவல்துறை ரோபோ!
பெங்களூரு: வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறாமல் இருப்பதற்காக அச்சு அசலாக போக்குவரத்து காவலர்கள்போல தோற்றமளிக்கும் பொம்மைகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துப் போலீஸார் இல்லையென்றால் சிக்னலை மீறிச்செல்வது, ஒரு வழிப் பாதையில் செல்வது என அத்துமீறல்கள் நடக்கும். இதைத் தடுக்க பெங்களூருவின் அத்தனை முக்கியச் சாலைகளிலும் போக்குவரத்துப் போலீஸார் போல் உடை அணிவிக்கப்பட்ட பொம்மைகள் நிறுத்தபட்டுள்ளன.
இது பல சாலைகளிலும் போக்குவரத்து விதிமீறுவோரைக் குழப்பி கலங்கடித்துள்ளதாகவே பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையினர் கூறுகின்றனர். காரில் செல்வோர் கூட போக்குவரத்துப் போலீஸ் பொம்மைகளைப் பார்த்து உடனடியாக சீட் பெல்ட் அணிவது, செல்போன் பேசிக்கொண்டிருந்தால் துண்டிப்பது ஆகிய காட்சிகளும் அரங்கேறி உள்ளதாம்.
இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் ரவிகாந்த கவுடா கூறுகையில், “இந்தத் திட்டம் கொஞ்ச காலத்துக்கு உதவும். அதன் பின்னர் பொம்மைகள் என்பதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்வார்கள். இதனால் விரைவில் போலீஸ் பொம்மைகள் மீது கேமிராவும் பொருத்த உள்ளோம். ஒரு இடத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டும் பொம்மைகளை நிறுத்தி வைத்துவிட்டு அடுத்து எங்கள் அதிகாரிகளேயே நிற்க வைக்கவும் ஒரு திட்டம் உள்ளது” என்றார்.
போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவலர்கள் போன்று தோற்றமளிக்கும் சுமார் 30 ஆளுயர பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.