நீங்க நீண்ட நாள் வாழ ஒரு 5 நிமிடம் இதை மட்டும் பண்ணுங்க....

உங்களுக்கு தெரியுமா? நாம எப்போதும் சிரிச்சுட்டே இருந்தா இந்தவகை நோய்கள் எல்லாம் வராதாம்...! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 27, 2018, 08:19 PM IST
நீங்க நீண்ட நாள் வாழ ஒரு 5 நிமிடம் இதை மட்டும் பண்ணுங்க....
Representational Image

உங்களுக்கு தெரியுமா? நாம எப்போதும் சிரிச்சுட்டே இருந்தா இந்தவகை நோய்கள் எல்லாம் வராதாம்...! 

காசு, பணம் இல்லாமல் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இயற்கையாக இறைவன் கொடுத்த பலம் பெரும் பரிசு. நாம் என்ன மனநிலையில் இருக்கிறோமோ அப்படித்தான் அந்தநாள் முழுக்க இருப்போம். காலையில் ஒரு நல்ல நகைச்சுவைக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குப் போனால், அந்த நாள் முழுக்க மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்லவரோ, கெட்டவரோ சிரிக்க மறந்து சிடுசிடுவென இருப்பவர்களை யாரும் விரும்புவதில்லை. முகமலர்ச்சியோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தாலும், நகைச்சுவையுணர்வுடன் பாடம் நடத்திய தமிழ் ஐயாதான் நம் அத்தனை பேரின் மனதிலும் நிறைந்திருப்பார். 

குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அவர்கள் யார், என்ன, எப்படிப்பட்டவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் யார் நின்று சிரித்தாலும் சிரிப்பார்கள்; நாம் சிரிக்காவிட்டாலும் சிரிப்பார்கள். சிரிப்பு உலகின் தனித்துவமான மொழி. இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவார்கள்; யாராலும் வெறுக்கப்பட மாட்டார்கள். சிரிப்பின் மகத்துவத்தை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். சிரிப்பு மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் என்பது மாயாஜாலம். 

சிரிக்கும்போது நம் உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன்களான எண்டார்பின் (Endorphins) அதிக அளவில் சுரக்கும். தலைவலி, உடலில் வேறு எங்கு வலி இருந்தாலும் அதை மறக்கச் செய்யும். அடிபட்ட குழந்தைகளைச் சிரிக்கவைப்பதற்கான முயற்சிகளைத்தான் பெரும்பாலும் செய்வோம். சிரிக்கும்போது குழந்தைகள் தங்களின் வலியை மறக்கிறார்கள். சிறியவர்கள் மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் இது பொருந்தும். கேன்சரால் பாதிக்கப்பட்டு கடுமையான வலி இருப்பவர்களுக்குக்கூட நல்ல நகைச்சுவைக் காட்சிகள், திரைப்படங்கள்தாம் காண்பிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு வலிகளைப் போக்கும் நிவாரணியாக சிரிப்பு இருக்கிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்க சிரிப்பு அவசியம். சிரிக்கும்போது நம் உடம்பில் அட்ரினல் சுரப்பிகள் சுரக்கின்றன. இது மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் (Cortisol) ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. நாம் மனஅழுத்தத்தோடு இருந்தால், அது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்துவிடும். அதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ,மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தினமும் சிரிப்பு என்னும் மருந்தை எடுத்துக்கொண்டால், வழக்கமாகச் சுரக்கும் கார்டிசால் ஹார்மோன்கள் 69 சதவிகிதம் குறைகின்றன என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. சிரிப்பு, நம் ஞாபகசக்தியை மேம்படுத்தும். மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். சில நாள்கள் நம் லட்சியத்தை அடைவதற்குச் சாதகமாகவும், பல நாள்கள் அதற்கு எதிரானதாகவும் நமக்குத் தோன்றும். அதனால் நமக்கு மனச்சோர்வு உண்டாகும். அனைத்து நாள்களையும் சாதகமானவையாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்கு, நாம் ஒவ்வொரு நாளும் `சிரித்து வாழ வேண்டும்.’ சிரிப்பு, நம் மூளைக்குச் செய்யப்படும் மசாஜ் போன்றது.

அதற்காக வம்படியாகச் சிரிக்கக் கூடாது. பின்னர் அதுவே நமக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்துவிடும். மனம்விட்டுச் சிரிக்க வேண்டும். அதற்கு நாம் நகைச்சுவையுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனச்சோர்விலிருந்து விடுபட முடியும். மனச்சோர்விலிருந்து விடுபட்டால்தான் நன்றாக உறங்க முடியும். நன்றாக உறங்கினால்தான் ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகத் தொடங்க முடியும்.

சிரிப்பு நம் ரத்த நாளங்களைத் தூண்டி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள், ரத்த நாளங்களைச் சுற்றி ஒரு சுவர்போல இருக்கும். நாம் சிரிக்கும்போது அது குறைந்துவிடும். ரத்த நாளங்கள் பாதுகாக்கப்படும். 

ரத்த நாளங்களுக்குள்ளே எண்டோதெலியம் (Endothelium) என்னும் ஹார்மோன் மெல்லிய கோடுகளைப்போல இருக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராகவைத்திருக்கவும், ரத்தத்தை உறையவைக்கவும் இந்த ஹார்மோன்கள்தாம் உதவுகின்றன. சிரிக்கும்போது எண்டோதெலியம் விரிவடைந்து சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவிபுரியும். இதனால் இதயம் பாதுகாக்கப்படும். வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சிரிக்கும்போது நம் உடலில் உள்ள டி - செல்கள் தூண்டப்படுகின்றன. அதனால் பீட்டா எண்டார்பின் (Beta-endorphins) போன்ற ஹார்மோன்கள் சுரந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஜப்பானில் நடைபெற்ற ஓர் ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.

விழிவெண்படல நோயால் (Atopic keratoconjunctivitis) பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்லி சாப்ளின் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான  'மாடர்ன் டைம்ஸ்' ஒளிபரப்பப்பட்டது. திரைப்படத்தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்ததில் அவர்களின் உடலில் இம்யயூனோகுளோபுலின்களின் (Immunoglobulins) உற்பத்தி அதிகமாகியிருந்தது கண்டறியப்பட்டது. அதாவது நோயை உண்டாக்கும் வைரஸ்களைத் தாக்கி பாதிப்பைக் குறைத்திருக்கிறது.