வாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார் பிரதமர் மோடி..

17வது மக்களவையின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கியது...... புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!

Last Updated : Jun 17, 2019, 12:08 PM IST
வாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.. title=

 

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைக்கிறார். அந்தவகையில், வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். 

அதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் எம்பியாகவும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ எம்பியாகவும், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் எம்பியாகவும்  பதவியேற்றுக் கொண்டனர்.  


17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். டெல்லியில் வீரேந்திர குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். 


மக்களவை தேர்தலுக்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர்!! 

17-வது மக்களவையை அமைப்பதற்கான தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று, மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், இன்று தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில், புதிய எம்பி.க்கள் இன்றும், நாளையும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

தொடர்ந்து மக்களவைக்கான புதிய சபாநாயகர் புதன்கிழமை தேர்வு செய்யப்படுகிறார். வியாழனன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நடப்பு கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், முக்கிய பிரச்னைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.

நாடாளுமன்றம் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த மக்களவையில் எம்பி.க்கள் நடந்து கொண்ட விதத்தால், 2 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எம்பி.க்கள் செயல்படுகிறார்களா என்பதை கட்சித் தலைவர்கள் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நாட்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் சந்தித்துள்ள நெருக்கடிகள், நாடு முழுவதும் காணப்படும் வறட்சி உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து, விவாதிக்க வேண்டும் என, கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மோடி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டமும் நடைபெற்றது.

இரு அவைகளையும் சேர்ந்த அனைத்து கட்சி எம்பி.க்கள் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வியாழனன்று நடைபெறும் இக்கூட்டத்தில், எம்பி.க்கள் தங்கள் கருத்துகளை எந்த தடையும் இன்றி அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்பி.க்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த முயற்சியை மோடி மேற்கொண்டுள்ளார். 

தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். புதன்கிழமையன்று இது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என மோடி கூறியுள்ளார். வரும் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாடுவது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை விமரிசையாக கொண்டாடுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

 

Trending News