மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு - உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

Wrestlers Protest: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், 1983இல் கிரிக்கெட் உலக்கோப்பை வென்ற இந்திய அணியினர் கூட்டாக இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2023, 04:34 PM IST
  • பிரிஜ் பூஷன், 7 வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
  • அவர் மீது தற்போது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஏப்ரல் மாதம் முதல் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு - உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை! title=

Wrestlers Protest: மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி, கடந்த ஏப். மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது 7 வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் பாஜக எம்பி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, போராட்டம் மல்யுத்த வீரர்கள் புதிய கட்டடத்தை நோக்கி பேரணி சென்றனர். அதனை தடுத்த நிறுத்திய டெல்லி காவல்துறை, அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தது. இருப்பினும், அவர்கள் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. 

மல்யுத்த வீரர்களை வலுகட்டாயமாக கைது செய்த காட்சிகள் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி குவித்த வீரர், வீராங்கனைகளின் மீதான இத்தகைய நடவடிக்கைகள் விமர்சனத்தையும் கிளப்பியது. தொடர்ந்து,  போராட்ட இடத்தையும் போலீசார் அகற்றிவிட்டு, ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க | FIR: பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டுகள்

இதை தொடர்ந்து, மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் மே 30ஆம் தேதி அன்று ஹரித்வார் சென்று தங்களின் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் அந்த முடிவு வீரர்களால் கைவிடப்பட்டது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அவரை கைது செய்வதே அவர்களின் அடிப்படை கோரிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மல்யுத்த வீரர்கள் பல்வேறு அமைப்பினரும், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக்கோப்பை வென்ற இந்திய அணியினர் கூட்டாக இணைந்து போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"எங்களின் சாம்பியன்களான மல்யுத்த வீரர்களை மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படும் காட்சிகளைக் கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அந்தப் பதக்கங்கள் அவர்களின் பல வருட முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியை உள்ளடக்கியவை. அவை அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, அது தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் உள்ளடக்கியுள்ளது. இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் வீரர்களை கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கேப்டன் கபில் தேவ் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்றது. அந்த அணியில் சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, யஷ்பால் ஷர்மா, மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கிர்த்தி ஆசாத் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோர் இருந்தனர். 1982ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டி வரலாற்றுப் பக்கங்களில் மறக்கப்படாத ஒன்றாகும். 

மேலும் படிக்க | மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு வைத்த மல்யுத்த வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News