கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுள்ள நிலையில், அதிருப்தி MLA-க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் முதல்வர் எடியூரப்பாவிற்கு சாதகமாய் அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் MLA-க்கள் 11 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் MLA 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 3 MLA-க்கள் கட்சிதாவல் தடுப்பு சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், பாஜக-வின் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையையும் குறைக்கும்.
தற்போதைய நிலைப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன MLA தவிர்த்து) இடங்கள் இருக்கும் நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 MLA-க்கள் இருக்கின்றனர்.
இதனால், பெரும்பான்மை எண்ணாக 105 உள்ளது. பாஜகவுக்கு 105 MLA-க்கள் இருப்பதால் எடியூரப்பாவால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும், ஒரு சுயேட்சை MLA-வின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு இருப்பதால், அவரின் ஆட்சி நிலைப்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் உச்ச நீதிமன்றம் சென்று, சபாநாயகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
இந்த இடைத்தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலே, ஒட்டுமொத்த பெரும்பான்மையான 113-ஐ எட்ட முடியும். 2013 வரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.