அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.
இந்தியா 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம் கொண்ட 'அக்னி-4' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணைகள் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதனை இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இன்று, ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து பகல் 12 மணியளவில் 'அக்னி-4' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி-4' பாய்ந்து தாக்கி அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு வட்டார ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.