கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் பிரிமியர் தொடரில் சூதாட்டம் வெடித்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பிகான், ரவீந்தரன் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, இந்திய கிரிக்கெட் போர்ட் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த 159 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை பி.சி.சி.ஐ. மற்றும் சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுத்தன.
இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை அடுத்த ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவு வழங்கியது. ஆனால், அதனை நிறைவேற்ற பிசிசிஐ தயக்கம் காட்டி வந்தது.
இந்நிலையில், பிசிசிஐ-யின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்ற லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவும் சுப்ரீம் கோர்ட் பிசிசிஐ தலைவருக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அனுராக் தாக்குர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், பிசிசிஐ-யில் சிஏஜி பிரதிநிதியை நியமிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) அனுமதிக் கடிதம் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.இதனிடையே, பிசிசிஐ-யில் அரசுத் தரப்பு (சிஏஜி பிரதிநிதி) தலையிட்டால் ஐசிசி-யின் அங்கீகாரத்தை பிசிசிஐ இழக்க நேரிடும் என்ற ஐசிசி தலைவரிடம் இருந்து கடிதம் பெற அனுராக் தாக்கூர் முயன்றார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க அவர் நடவடிக்கை மேற்கொள்கிறார் என்று தகவல் வெளிப்பட்டது.
நீதிமன்ற உத்தரவில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அதைவிட்டுவிட்டு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க குறுக்கு வழிகளைக் கையாண்டுள்ளீர்கள். நாங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால் சிறைக்கு செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருக்காது. ஐசிசி-யில் இருந்து நீங்கள் கடிதம் கேட்டுள்ளீர்கள் என்பது அவர்கள் மூலமே தெரியவந்துவிட்டது. பிசிசிஐ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தோம். அதற்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன? என்று நீதிபதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.
கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதிஉச்சநீதிமன்றம் அனுராக் தாக்கூர்க்கு கடும் கண்டனம் தெரிவித்தது.அதன்பிறகு இந்த விவகாரம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நீதிமன்றம் கடந்த ஆணிடு ஜுலை மாதம் 18-ம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை சரியாக பின்பற்றாத காரணத்தால் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலர் அஜய் ஷிர்க்கே ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டது. லோதா குழு பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ., மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுப்ரீம் கோர்டின் இந்த நடவடிக்கையால் இந்திய கிரிக்கெட் சங்கங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.