GST வரி கொண்டு வந்தமைக்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பாராட்டு தெரிவித்து முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் விருது அளித்துள்ளார்!
நாட்டில் துணிகர மாற்றம் கொண்டு வந்தவர்களுக்கான விருதாக Changemaker Of The Year என்னும் விருதினை BusinessLine ஆண்டுதோறும் வழங்கிய வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சகத்திற்கும், 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரருக்கும் அறிவிக்கப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரியை (GST) வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சகம் சார்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வழங்கினார்.
நேற்றைய தினம் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த விருதை, 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரர்களும் பகிர்ந்து கொண்டனர். (ஒருபால் ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக்கிய 377 பிரிவு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது)
Today GST COUNCIL got BUSINESS LINE-CHANGE MAKER OF YEAR AWARD. Presented to Finance Minister Shri @arunjaitley by Dr Manmohan Singh.
Gabbar Singh Tax, Rahul Gandhi? pic.twitter.com/TZO0gMT2e3
— BJP (@BJP4India) March 15, 2019
விருதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ராகுல் காந்தியை விமர்சிக்குமாறு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லிக்கு, மன்மோகன் சிங் விருது வழங்கியதை குறிப்பிட்டு, "கப்பர் சிங் வரியா, ராகுல் காந்தி?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தொடர்ந்து எழுப்பப்பட்ட விமர்சனம் 'கப்பர் சிங் டேக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.