ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புக்கு இடையே, தேர்தல் ஆணையம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாநிலத்தில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது!
"ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்கள் மே மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். வரும் 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் இத்தேர்தல் நடத்தப்படலாம்," என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ரவாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் படி, ஒரு சட்டமன்ற கலைப்பிற்கு பின்னர், அடுத்த ஆறு மாதத்திற்குள் அம்மாநிலத்தில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் வரும் மே, 2019-குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், "தேர்தலுக்கு பின்னர் ஏற்படும் விளைவுகள், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார். வரும் 2019-ஆம் ஆண்டு பொதுதேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மிர் சட்டபேரவை தேர்தல் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே அம்மாநில தேர்தல் குறித்து தீவிர ஆலோசணைக்கு பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஜம்மு-காஷ்மிர் சட்டசபை கலைப்பு..."
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை திரும்பப்பெறுவதாக அறிவித்தது.
இதன் காரணமாக பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 2 MLA-க்களைக் கொண்ட சஜ்ஜாத் லோனின் மக்கள் மாநாட்டுக் கட்சி தலைமையில் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.
87 தொகுதிகள் கொண்ட ஜம்முவில் ஆட்சியை அமைக்க 44 தொகுதிகள் வேண்டும். இந்நிலையில் 25 தொகுதிகளை கொண்ட பாஜக, 2 MLA-க்களைக் கொண்ட சஜ்ஜாத் லோனின் மக்கள் மாநாட்டுக் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சித்தது. எனினும் ஆட்சியமைக்க மேலும் 17 MLA ஆதரவு தேவைப்படும் நிலையில் பிடிபி கட்சியிலிருக்கும் அதிருப்தி MLA-க்கள் சிலரது ஆதரவினை பாஜக திரட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இதற்குப் போட்டியாக 29 தொகுதிகள் கொண்ட பிடிபி, 12 தொகுதிகள் கொண்டுள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இக்கூட்டணி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற பட்சத்தில், சட்டப் பேரவையைக் கலைப்பதாக மாநில ஆளுநர் சத்திய பால் மாலிக் புதன் அன்று திடீரென அறிவித்தார்.
இந்த அறிவிப்பு மாநில அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்ததாலேயே இந்த நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து தெரிவித்துள்ளார்.