Bhole Baba Video Statement: உத்தர பிரதேச ஹத்ராஸ் நகரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பிரபல சாமியார் போலே பாபா என்ற நாராயண் சகர் ஹரி என்பவரின் சத்சங் என்றழைக்கப்படும் வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 35 பேர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோரின் குடும்பத்தாருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மாநில அரசால் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேர் பங்கேற்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியானது. அதுவும் அந்த நிகழ்ச்சியில் இருந்து சாமியார் போலே பாபா கிளம்பிய பின்னர், அவரது காலடி மண்ணை எடுக்க கூட்டம் அலைமோதியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆண், பெண், குழந்தைகள் அனைவருமே கீழே சரிந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.
இதுவரை 7 பேர் கைது
இந்த வழிபாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்த தேவ்பிரகாஷ் மதுகர் என்பவர் உள்பட 7 பேரை காவல்துறையினர் இப்போது கைது செய்துள்ளனர். இதில் இரண்டு பெண்களும் அடங்குவர். இவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்த நிலையில், அந்த குழு அரசுக்கு ரகசிய அறிக்கை ஒன்றை சமர்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
#WATCH | Hathras Stampede Accident | Mainpuri, UP: In a video statement, Surajpal also known as 'Bhole Baba' says, "... I am deeply saddened after the incident of July 2. May God give us the strength to bear this pain. Please keep faith in the government and the administration. I… pic.twitter.com/7HSrK2WNEM
— ANI (@ANI) July 6, 2024
மேலும் படிக்க | ஹத்ராஸ் மதகூட்ட நெரிசல் பலி 116ஆக உயர்ந்தது! சாமியார் விஸ்வ ஹரி போலே பாபா யார்?
மூன்று பேர் கொண்ட அந்த சிறப்பு விசாரணை குழு இதுவரை 90 நபர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தையும் மாநில அரசு அமைத்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் சாமியார் போலே பாபா மீது FIR பதிவு செய்யப்படவில்லை. இது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
குடும்பத்திற்கு நிதியுதவி
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்திற்கு பின் சாமியார் போலே பாபா தலைமறைவானார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏபி சிங் நேற்று தெரிவித்திருந்தார். அதில் அவர்,"எங்களிடம் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் உள்ளது. நாராயண் சகர் ஹரியின் அறக்கட்டளை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடைய கல்வி, மருத்துவம் மற்றும் திருமண செலவுகளுக்கு பொறுப்பேற்கும்" என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்நிகழ்வின் தலைமை ஏற்பட்டாளராக பெயரிடப்பட்ட தேவ்பிரகாஷ் மதுகரை, டெல்லியில் உள்ள போலீஸ், சிறப்பு விசாரணைக் குழு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோருக்கு அறிவித்துவிட்டு சரணடைய செய்தோம். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நாங்கள் எந்தத் தவறும் செய்யாததால் முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்க மாட்டோம் என்று போலீசாருக்கு உறுதியளித்தோம். அவர் என்ன குற்றம் செய்தார்...? அவர் ஒரு பொறியாளர் மற்றும் இதய நோயாளி. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதால், விசாரணையில் இணைய சரணடைய செய்தோம்" என்றார்.
சாமியார் பேசியது என்ன?
இந்நிலையில் சில நாள்களாக தலைமறைவாக இருந்த சாமியார் போலே பாபா இன்று ஊடகம் ஒன்றிடம் பேசினார். அந்த வீடியோவில் அவர் பேசியாதவது,"இந்த வலியை தாங்கிக்கொள்ளும் பலத்தை இறைவன் நமக்கு அளிப்பார். அரசின் மீதும் நிர்வாகத்தின் மீதும் தயவு செய்து நம்பிக்கை வைப்போம். இந்த அசம்பாவிதத்தை நிகழ்த்தியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏபி சிங் மூலம் நான் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் உதவிகரமாக இருப்பேன் என்பதை தெரிவித்தேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ