டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். ரொக்கமாக வழங்கப்படுகிற இந்த தொகை, கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கூலி இழப்பை சரிக்கட்டுவதாகவும் அமையும். எனவே பிரசவத்துக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியும்.
முதல் குழந்தைக்கு மட்டும்தான் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் பலனை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர்த்து அனைத்து பெண்களும் பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்.
இந்த மகப்பேறு உதவி திட்டம் 2017-ம் ஆண்டு, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான செலவு ரூ.12 ஆயிரத்து 661 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 ஆயிரத்து 932 கோடி.
கர்ப்பத்தை பதிவு செய்தவுடன் ரூ.1,000, 6 மாதங்களுக்கு பிறகு முதல் கர்ப்ப கால பரிசோதனை செய்த பின்னர் ரூ.2 ஆயிரம், குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசிகள் போடுகிற காலகட்டத்தில் ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரத்தை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கர்ப்பிணிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி விடும்.
விதிமுறைகளின்படி பயனாளிகள் மீதித்தொகையையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் ரூ.6 ஆயிரம் பெறுவார்கள்.