உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்: அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன

CJI DY Chandrachud Takes Oath:  உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2022, 12:37 PM IST
  • தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நீதிபதிகள் தேர்வு செயல்முறையை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வார்.
  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் உறுப்பினர்கள் எப்போதும் மூன்று முக்கியமான மதிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
  • நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் மிக முக்கியம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்: அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன title=

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் டி.ஒய். சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிஒய் சந்திரசூட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சந்திரசூட், கடந்த 10 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான பல முன்னணி முயற்சிகளை இவர் எடுத்துள்ளார். 

நவம்பர் 11, 1959ல் பிறந்த டி.ஒய்.சந்திரசூட், கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னால் பல சவால்கள் உள்ளன. இவற்றில், ஐந்து முக்கிய நீதித்துறை சவால்களைப் பற்றி இங்கே காணலாம். 

நீதிபதி சந்திரசூட்டுக்கு பல பெரிய விவகாரங்களின் தீர்ப்புகளில் பங்கு இருந்துள்ளது

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் சட்டப் பள்ளி போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்தவர். அயோத்தி நிலப்பிரச்சனை, ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குதல், ஆதார் திட்டத்தின் செல்லுபடியாகும் விவகாரங்கள், சபரிமலை விவகாரம், ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர கமிஷன் உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய பல அரசியல் சாசன அமர்வுகள் மற்றும் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சந்திரசூட் அங்கம் வகித்துள்ளார். 

தலைமை நீதிபதி சந்திரசூட் முன் உள்ள 5 பெரிய சவால்கள்:

முதல் சவால்:

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நீதிபதிகள் தேர்வு செயல்முறையை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் உறுப்பினர்கள் எப்போதும் மூன்று முக்கியமான மதிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் மிக முக்கியம். இதனுடன், நீதித்துறையின் உயர்மட்ட பணி நியமனங்களில் பெண்களின் பங்கேற்பு உள்ளிட்ட பன்முகத்தன்மையை மேம்படுத்துவதும் அவசியம். பணிமூப்பு என்பதை விட தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்! 

இரண்டாவது சவால்:

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் இருக்கும் இரண்டாவது பெரிய சவால் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதாகும். புதிய மற்றும் புதுமையான முயற்சிகள் மூலம் நீதிபதிகளின் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம். எல்.எல்.எம், பிஎச்டி போன்ற உயர் சட்டப் பட்டங்களைத் தொடர அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நீதித்துறையானது பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.

மூன்றாவது சவால்:

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்வார். இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக நீதி கிடைக்கும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், இ-கோர்ட் திட்டத்தை வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அமர்வு மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களையும் திறம்பட மாற்ற முடியும்.

நான்காவது சவால்:

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேசிய வழக்கறிஞர்கள் அகாடமியை (என்.எல்.ஏ.) அமைக்கும் சவாலை எதிர்கொள்வார். இதனால் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் தயாராக முடியும்.

ஐந்தாவது சவால்:

நாட்டின் கல்வி முறை மற்றும் சட்டக் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் இருக்கும் ஐந்தாவது பெரிய சவாலாக இருக்கும். இதனால் நாடு நல்ல மற்றும் திறமையான சட்ட வல்லுநர்களைப் பெற முடியும்.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்த யுயு லலித் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News