உத்தர பிரதேசம்: கோவிட் 19 வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க மார்ச் 24 அன்று பிரதமர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து உ.பி.யின் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் நொய்டாவிலிருந்து தனது கிராமத்திற்கு 200 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார்.
ஒரு நாளேடு பத்திரிக்கை செய்தி வெளியிட்ட அறிக்கையின்படி, ஜலான் மாவட்டத்தின் ராத் கிராமத்தில் உள்ள "அந்தா" பகுதியில் வசிக்கும் அஞ்சு தேவி மார்ச் 25 ஆம் தேதி வீடு திரும்பும் பயணத்தைத் தொடங்கியபோது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கணவர் நொய்டாவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அஞ்சுவும் அவரது கணவரும் உ.பி.யில் உள்ள ஓரைக்கு ஏறக்குறைய 200 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
இந்த தம்பதியினர் தங்கள் சொந்த இடத்தை அடைந்தபின் ஒரு மருத்துவரை சந்தித்தனர். அங்கு அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இவர்களை போன்றே பலர் நடந்தே தங்கள் கிராமத்திற்கு சென்றனர். அதில் பலர் பசி, பட்டனி, வாகனங்கள் எதுவும் இல்லாமல், குழந்தைகளை தோளில் சுமந்துக்கொண்டு சென்ற காட்சிகளின் புகைப்படம் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.