இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பெண் ரைடர்களை பணியமர்த்துவதற்கான அவசியம் அதிகரித்து வருவதாகவும், பணியாட்களின் தேவையை பூர்த்தி செய்ய பெண் டெலிவரி பார்ட்னர்கள் தேவைபடுவதாகவும் தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பெண்கள் ஒரு வேலையில் நீண்ட நாட்கள் இருக்கும் தன்மை உள்ளவர்கள், சிறந்த தக்கவைப்பு விகிதத்தைக் கொண்டுள்ளவர்கள், திறமையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Zomato, Swiggy, Ecom Express மற்றும் Shadowfax போன்ற நிறுவனங்கள் தங்களது கடைசி மைல் டெலிவரி ஃப்ளீட்டில் அதிக பெண்களை ஈடுபடுத்த விரும்புகின்றன.
Ecom Express இன் தலைமை மக்கள் அதிகாரி சவுரப் தீப் சிங்லா கூறுகையில், "பெண் ரைடர்களை பணியமர்த்துவது பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் பல முயற்சிகளில் ஒன்றாகும். நாங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவது பன்முகத்தன்மை எண்களை மேம்படுத்துவதற்காக மட்டும் அல்ல, ஆனால் அவர்களின் தக்கவைப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பெண் பணியாளர்கள் நேர்மையானவர்கள், விடாமுயற்சி உள்ளவர்கள் மற்றும் அதிக கவனம் செலுத்துபவர்கள், மேலும் அவர்கள் மிகவும் திறமையானவர்கள்." என்று தெரிவித்தார்.
நிறுவனங்களுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனமான மேன்-பவர்-குரூப் கணித்த இந்தியாவின் மதிப்பீடுகளின்படி, டெலிவரி துறையில் மாதத்திற்கு 6-7% பேர் டெலிவரி பணிகளில் இருந்து வெளியேறுகின்றனர். இந்த ஆட்களின் எண்ணிக்கை தேய்வு விகிதம் டெலிவரி துறையின் ஒரு பாதிப்பாகவே கருதப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் டெலிவரி பிரிவில் 4-7% ஆக இருந்த பெண் பணியாளர்கள் விகிதம் அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 15-20% ஆக அதிகரிக்கும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது.
Flipkart Quick, Zepto, BigBasket மற்றும் Swiggy Instamart போன்ற ஆன்லைன் சந்தைகளுடன் இணைந்து செயல்படும் Shadowfax Technologies, 1,00,000 மொத்த டெலிவரி பணியாளர்களில் 6,600 பெண் டெலிவரி பார்ட்னர்களை தற்போது பணிக்கு எடுத்துள்ளது.
"டையர்-1 மற்றும் டையர்-2 நகரங்களில் டெலிவரி பார்ட்னர்களாக பெண்களுக்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம், மேலும் இதைப் பலமடங்கு அதிகரிக்க எண்ணுகிறோம்" என்றும், "முழு ஹைப்பர்லோகல் டெலிவரி பிரிவின் தொடக்கத்தினால் இந்த பெண் டெலிவரி பாட்னர்களின் தேவையை அதிகரிக்கிறது." என்றும் ஷேடோஃபாக்ஸ் (Shadowfax) டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் பன்சால் கூறினார்.
இன்ஸ்டன்ட் டெலிவரி பிக்அப் மூலம் குறுகிய தூர டெலிவரி பணிகள் கிடைப்பது பெண்களுக்கு மிகவும் சாதகமான பணியாக கருதப்படுகிறது.
"Zomato இன்ஸ்டன்ட் பெண் மற்றும் திருநங்கைகளின் டெலிவரி பாட்னர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. குறுகிய சுற்று வட்டாரம் (2 கி.மீ.க்கும் குறைவான), வரையறுக்கப்பட்ட பாதைகள் குறித்த தகவல், எங்களின் பராமரிப்பு மற்றும் அவசரகால ஆதரவு ஆகிய வசதிகளும் இதற்கு காரணம்," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதிக பெண் பணியாளர்களை ஈர்க்க, Swiggy குறுகிய தூர ஆர்டர்களை சைக்கிள் மூலம் டெலிவரி செய்ய அனுமதிக்கிறது.
“பல பெண்களுக்கு தனிப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான அணுகல் இல்லை அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லை. குறுகிய தூர ஆர்டர்களுக்கு மிதிவண்டி மூலம் டெலிவரி செய்வது ஒரு சாத்தியமான வழி என்று அவ்வாறான பெண்களுக்கு உறுதியளிக்கிறோம். மின்சார சைக்கிள்கள் மற்றும் பைக்குகளை (மணிக்கு 25 கிமீ வேகத்தில்) வாடகைக்கு வழங்குவதை எளிதாக்குவதற்கு நாங்கள் மின்சார இயக்கக் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று துணைத் தலைவர் மிஹிர் ஷா (துணைத் தலைவர் - ஆபரேஷன்ஸ், ஸ்விக்கி) கூறினார்.
மேலும், 22% பெண் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் சைக்கிள்களில் டெலிவரி செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
பெண் டெலிவரி பார்ட்னர்கள் தங்களின் மாதவிடாய் நேரத்தின்போது ஓய்வெடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க இந்த டெலிவரி நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
பெண்களுக்கு இணக்கமான வேலை சூழலை உருவாக்க நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பெண் டெலிவரி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சுகாதாரமான கழிவறை அணுகல், பாதுகாப்பு பயிற்சி, SOS எச்சரிக்கை அமைப்பு போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை நடத்த கம்பேனிகள் முயர்சித்து வருகின்றன.
ஸ்விக்கி, ஷெல் பெட்ரோல் நிலைய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, அதன் டெலிவரி பார்ட்னர்களுக்கு (ஆண் மற்றும் பெண்) நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிவறைகளுக்கான அணுகலை பெற்று தந்துள்ளது.
"பாலினப் பன்முகத்தன்மைக்கு நிறுவனங்கள் மிகப் பெரிய உள் இலக்குகளை நிர்ணயித்தாலும், டெலிவரி ஏஜென்ட் வேலைகளை எடுக்க விரும்பும் பெண்கள் இன்னும் மிகக் குறைவு" என்றும், "மிகக்கடினமான டெலிவரி வேலைகள் பெண்களுக்கான வேலை அல்ல என்ற பாலின சார்பு கருத்தை பலர் பெண்களை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்." என்றும் மேன்-பவர்-குரூப் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் அலோக் குமார் கூறுகின்றார்.