மாயமான ஏஎன்32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் நோக்கி சென்ற AN-32 விமானம் கடந்த 3 ஆம் தேதி மாயமானது. கடந்த 8 நாட்களாக விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில், அருணாசலப் பிரதேச மாநிலம் லிப்போ என்ற இடத்திற்கு அருகே 12 ஆயிரம் அடி உயரத்தில் கிடந்த விமானத்தின் சிதைந்த பாகங்களை விமானப்படை ஹெலிகாப்டர் கண்டறிந்துள்ளது.
AN-32 விமானம் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை சென்று சேர்ந்தன. ஆனால், அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை. எனினும், விமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. தரைப்படையினரும் விபத்து நடந்த பகுதிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Efforts are now continuing to establish the status of occupants & establish survivors. Further details will be communicated as the recovery actions progress.
— Indian Air Force (@IAF_MCC) June 11, 2019
இதேபோல, விமானங்களிலிருந்து கருடா கமாண்டோக்கள், விமானப்படை மலையேற்ற வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் மற்ற பாகங்களையும், விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை குறித்தும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. எனினும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வது சவாலாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.