டெல்லியில் தொடர்ந்து 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள விரோதபோக்கினை கைவிட வலியுறுத்தி டெல்லியில் 13 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் அனைவரும் குளிர், வெய்யில் பாராமல் அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் விஷால் நேற்று விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். பின்னர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மனு கொடுத்தனர். போராட்டம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.