காஷ்மீர் ஸ்ரீநகர் தொகுதியில், கடந்த 9-ம் தேதி மக்களவை இடைதேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு தொடர்ந்து பதற்றநிலை உருவானது. குறிப்பாக, இன்டர்நெட் சேவை முழுவதும் ரத்துசெய்யப்பட்டது அதன் பிறகு கடந்த 13-ம் தேதி இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
இதில் இளைஞர்கள் சிலர், ராணுவ வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கியுள்ளனர். கல் எறிந்து தாக்கிய இளைஞர்களில் ஒருவரை ராணுவத்தினர் பிடித்து, வாகனத்தின் முகப்பில் கட்டிவைத்துள்ளனர். பின்னர், அவரை கேடயமாகப் பயன்படுத்தி, ஜீப்பை ஓட்டிச் சென்ற வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, அங்குள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்நிலையில் சம்பவம்குறித்து அங்கு பீர்வா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் மந்திரி மெகபூபா முப்தியும் அறிக்கை கேட்டு இருந்தார். இதற்கிடையில், ராணுவம் மீது ஜம்மு காஷ்மீர் போலீசார் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர்.கடத்தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.