கடந்த 14-ம் தேதி முதல் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அட்டப்பாடி, பாலக்காடு, திருவனந்தபுரம், கண்ணனூர், ஆலப்புழை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, கோட்டயம் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கேரளத்தில் இன்னும் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கன மழை காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.