இந்தியாவின் தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் கடந்த ஜனவரி 30 அன்று உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள நவ்ரங்காபாத்தில் இந்து மகாசபையின் தலைவர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். மேலும் காந்தியை சுட்டுக்கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் பல அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட பூஜா பாண்டே தலைமறைவானார். உத்தரப் பிரதேச போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
கைது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், என்னுடைய உரிமையை தான் நான் செய்தேன். தாம் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை என்றும் பூஜா பாண்டேவும், எங்கள் கடமையை நாங்கள் செய்தோம். காவல்துறை அவர்களின் கடமையை செய்கிறது என்று அவரது கணவர் அசோக் பாண்டேவும் தெரிவித்துள்ளனர்.