புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 பேரும் புல்வாமா தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என்றும், அதில் கம்ரான் என்பவன் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ராணுவம், சிஆர்பிஎஃப், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சார்பில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்றவுடன், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டு வந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டதாக, ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் (Lt General Kanwal Jeet Singh Dhillon) குறிப்பிட்டார்.
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தரவுகளின்படியே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செயல்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
தங்களது பிள்ளைகள் தீவிரவாதப் பாதைக்கு சென்றுவிடாமல் பெற்றோர் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எச்சரிக்கைக்கு பிறகும், தீவிரவாதப் பாதைக்கு சென்று துப்பாக்கி தூக்குபவர்கள் கொன்றொழிக்கப்படுவார்கள் எனவும் கே.ஜே.எஸ்.தில்லான் கூறினார். ஈராக், சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கையாளும் முறை புல்வாமாவில் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலம் கழித்து இத்தகைய தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே அதற்கேற்ப உத்திகளும் மாற்றியமைக்கப்பட்டு, பதிலடிக்கான அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் கைகளுக்கு பெருமளவிலான வெடிபொருட்கள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு, அதுகுறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர் பற்றிக் குறிப்பிட்ட ராணுவ அதிகாரி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என பாதுகாக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக தெரிவித்தார்.
காஷ்மீரிலும் நாடு முழுவதும் காஷ்மீரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், அவர்களை பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக CRPF ஐ.ஜி. ஜூல்பிகர் ஹசன் (Zulfiqar Hasan) கூறினார்.