உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்த முன்னாள் பெண் உதவியாளர் நேரில் ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பியும் வைத்தார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்தார். அதோடு இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாப்டே தலைமையிலான இந்த நீதிபதிகள் குழு கடந்த 26-ஆம் தேதி துவங்கி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் தெரிவித்து பெண் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதை ஏற்று பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் ஊழியர் கடந்த வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் விசாரணை குழு முன் ஆஜரானார். ஆனால் நேற்று அவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதுகுறித்து குறிப்பிட்ட அந்த பெண்ணிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் தனக்கு ஆஜராகி வாதாட விரிந்தா குரோவர் என்ற வழக்கறிஞரை நியமித்து இருந்ததாகவும், ஆனால் தனக்கு உரிய உதவிகள் எதுவும் செய்யயாம் தாமதம் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் தன் மீதான விசாரணையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலியல் புகாரை தாமதமாக கொடுத்தது ஏன்? என்பது பற்றி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். தனக்கு இதுவரை வழக்கு விசாரணை தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.
தனது கோரிக்கைகளை 3 நீதிபதிகளும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே இந்த நீதிபதிகளிடம் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரவில்லை. ஆகவே தான் இனி இந்த விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.