கல்விக் கட்டண உயர்வை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்...!
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கழைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 40 சதவீத மாணவர்கள் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்கள் என்றும் எனவே, கல்விக் கட்டண உயர்வை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பல்கலைக் கழக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மாணவர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
#WATCH Delhi: Women police personnel push back girl students of JNU as the protest by Jawaharlal Nehru Students' Union (JNUSU), over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/FahM7wi8VV
— ANI (@ANI) November 11, 2019
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். கல்விக் கட்டண உயர்வு, ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.