18 July 2019, 12:17 PM
கூட்டணி ஆட்சியை தொடர்வது குறித்து நான் எதுவும் பேசவில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றே பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் நினைக்கின்றனர். அரசியல் குழப்பத்திற்கு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தான் காரணம். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டணி ஆட்சி குறித்து தொடக்கம் முதலே சிலர் தவறான தகவல் பரப்பினர். என் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அரசியல் சாசனத்தை காக்கவும், சபாநாயகரின் உரிமையை பாதுகாக்கவும் தான் போராடுகிறேன் என கர்நாடக முதலவர் HD குமாரசாமி தெரிவித்தார்.
18 July 2019, 10:58 AM
முதல்வர் குமாரசாமி விதான சவுதா வருகிறார்.
சபாநாயகர் ரமேஷ் குமாரும் சட்டமன்றத்தை எட்டியுள்ளார்.
18 July 2019, 10:42 AM
நாங்கள் 101 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்கள் 100 க்கும் குறைவானவர்கள், நாங்கள் 105 பேர். அவர்களின் இயக்கம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை: பி.எஸ். எடியூரப்பா
18 July 2019, 08:12 AM
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் விதான் சவுதாவை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 144 தடை
கர்நாடகா சட்டசபையில் குமாரசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது!!
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் 16 பேர் கடந்த வாரம் ராஜிநாமா செய்தனர். ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகர் தாமதப்படுத்துவதாக 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது என்றும் அதேசமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏ-க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்றும், அவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என்றும் கூறிய நீதிபதிகள், இதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு வருமாறு நிர்பந்திக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சபாநாயகர் எந்த முடிவு எடுத்தாலும் அதனை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அரசியல் சாசன சமநிலையை நீதிமன்றம் கடைபிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பின்னர் இறுதி தீர்ப்பில் விடை அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் முற்றி உள்ளது. அந்த மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வற்புறுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால் அவர்கள் அவையை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்.
மும்பையில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்கேயே இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் பாஜ.கவின் உறுப்பினர் எண்ணிக்கை 105. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர். இது தவிர சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.கவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆளும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு 101 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இதில் சபாநாயகரின் வாக்கை கழித்தால் ஆளும் கூட்டணிக்கு 100 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் சபைக்கு வராத நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆக குறையும். இந்த நிலையில் அறுதி பெரும்பான்மைக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
இந்த நிலையில் பா.ஜ.கவுக்கு 107 பேரின் ஆதரவும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 பேரின் ஆதரவும் இருக்கும். இதனால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய குமாரசாமியின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்க வாய்ப்பில்லை. இதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர்களும், அடுத்த வாரத்தில் கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு அமையும் என்று எடியூரப்பாவும் கூறியுள்ளனர்.