டெல்லி: 2019 மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரையில் ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 6-ஆம் கட்ட தேர்தல் வரும் மே 12 ஆம் தேதியும், 7-ஆம் கட்டத் தேர்தல் மே 19 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து மாநில கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் பணியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இதே முயற்ச்சியில் கே.சந்திரசேகர் ராவ் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு வாரத்தை நடத்தினார்.
இந்தநிலையில், தற்போது மீண்டும் மூன்றாவது அணி திட்டத்தை கையில் எடுத்த கே.சந்திரசேகர் ராவ், கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தென்னிந்தியாவில் இருந்து ஒருவரை பிரதமராக ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் கே.சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் கடந்த காலங்களில் தெலங்கானா ராஷ்டிர சமிதி பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளதால், சில அரசியல் கட்சி தலைவர்கள் கே.சந்திரசேகர் ராவ் சந்திக்க மறுத்து உள்ளதாகவும், அவரின் திட்டத்துக்கு ஆதரவு கொடுக்க தயங்குவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.