நாட்டில் பல மாநிலங்கள் கொரோனா (Corona) தொற்றின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஊரடங்கை அமல்படுத்தியும், தளர்வுகளை அளித்தும் வருகின்றன. அவ்வகையில், கர்நாடகாவின் (Karnataka) தலைநகரான பெங்களூருவில் (Bengaluru) கொரோனா தொற்றின் விகிதம் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், அங்கு மீண்டும் ஊரடங்கை (Lockdown) செயல்படுத்த மாநில அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
ஜூலை 14 மாலை முதல் 22 வரை லாக்டௌன் செயல்படுத்தப்படும் என்ற மாநில அரசாங்கத்தின் முடிவும், பெங்களூருவில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றும், மற்ற பகுதிகளிலிருந்து வந்து இங்கு தங்கி இருக்கும் மக்களை தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல நிர்பந்தித்துள்ளது.
ALSO READ: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த தற்போதைய நிலவரம் என்ன?...
திங்கட்கிழமை காலை, நெலமங்கள டோல் கேட்டில் (Nelamangala Toll Gate) ஏராளமான வாகனங்கள் குவிந்தன. போக்குவரத்தை எளிதாக்க, சில நேரம் கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகளை டோல் பிளாசாவை கடக்க போலீசார் அனுமதித்தனர். மக்கள் தங்கள் வீட்டுப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஏற்றிகொண்டு டெம்போக்களில் பயணம் செய்வதைக் காண முடிந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊரை அடைய டாக்சிகளையும் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) இடை மாவட்ட சேவையையும் அதிக பயணிகள் பயன்படுத்தினர். காலை 11 மணி வரை, 333 பேருந்துகள் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு 8938 பயணிகளை ஏற்றிச் சென்றன. ஏற்கனவே 231 பேருந்துகளின் இருக்கைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக KSRTC அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை காலை எங்கள் பேருந்துகளுக்கான தேவை அதிகரித்தது. முன்னதாக, நாங்கள் 50% சுமை திறன் கொண்ட 350 முதல் 400 பேருந்துகளை இயக்கிக் கொண்டிருந்தோம். ஒரு பேருந்தில் சுமார் 15 பேர் பயணித்தனர். இப்போது பேருந்துகள் முழு திறனுடன் இயங்குகின்றன. அதாவது ஒரு பேருந்திற்கு 30 இருக்கைகள் உள்ளன. சேவைகளின் எண்ணிக்கை மாலை வரை 900 ஐத் தாண்டக்கூடும் ”என்று KSRTC -யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.