எம்.பி. பதவியை மாயாவதி ராஜினாமா செய்தார்!!

Last Updated : Jul 19, 2017, 08:31 AM IST
எம்.பி. பதவியை மாயாவதி ராஜினாமா செய்தார்!! title=

உ.பி.யில் தலித் பிரச்சனையை பற்றி பார்லிமென்ட்டில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் தலித் இன மக்களுக்கு எதிராக சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பார்லிமென்ட் மேல்சபையில் மாயாவதி பிரச்சனை எழுப்பினார். இவ்விவகாரம் தொடர்பாக அவையில் தனது கருத்தை பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று மாயாவதி கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து, அவருக்கு 3 நிமிடம் நேரம் ஒதுக்குவதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் தெரிவித்தார். அப்போது பேசிய மாயாவதி:-

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கருக்கு சிலை வைக்கவும் பேரணியாக செல்லவும் தலித் இன மக்களுக்கு சஹரன்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடை விதித்தது. ஆனால், மே மாதம் 5-ம் தேதி மஹாராணா பிரதாப் ஆதரவாளர்கள் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அவர் பேசிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என குரியன் சுட்டிக்காட்டினார். இதனால், கோபம் கொண்ட மாயாவதி, நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. இடையில் நீங்கள் இதுபோல் குறுக்கீடு செய்யகூடாது. எங்கள் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் இந்த அவையில் நான் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தமில்லை, என்று கூறினார். 

இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றால், பார்லிமென்ட் விதிமுறைகளின்படி முன்கூட்டியே ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று குரியன் குறிப்பிட்டார். இதனால், மேலும் கோபம் அடைந்த மாயாவதி, தனது இருக்கையை விட்டு எழுந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறி அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து இதர சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர். 

இதை தொடர்ந்து பார்லிமென்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி:-

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதை பார்லிமென்ட்டில் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து மாநிலங்களவை தலைவர் அமித் அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 

 

 

Trending News