நாடு முழுவதும் 17ம் தேதி போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2019, 06:17 PM IST
நாடு முழுவதும் 17ம் தேதி போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு title=

புது டெல்லி: கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காதது தான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 

இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஐந்தாவது நாட்களாக இன்றும் தொடரும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினார். மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளத்தால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி மீண்டும் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள். 

இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். 

இந்த போராட்டம் மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியேயும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் நாடு முழுவதும்  மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Trending News