Tamilnadu Government Ration Card Toor Dal | தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் ஆகியவை தரமில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அது குறித்து தெளிவான விளக்கத்தை தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்று தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. என தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அண்மையில் வெளியான செய்தியில் தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டு வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும்.
தமிழ்நாட்டில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000 படி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. நாளிதழ்களில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில் நுட்ப ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 5 அலுவலர்களைக் கொண்ட ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள (Technicaly Qualified) ஒப்பந்தப்புள்ளிகளின் பட்டியலினை இக்குழு பரிந்துரைக்கிறது. அதன்பின்னர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டுத் தகுதியான நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குழுமத் துணைக்குழு விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் குழுமக்குழுவின் ஒப்புதல் பெற்று குறைந்த விலைக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களுக்குப் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஜனவரி 2025 முதல் மார்ச் 2025 வரையிலான மூன்று மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்குக் கடந்த 21.11.2024 அன்று பருப்பு மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பாமாயில் மாதிரிகள் ஒப்படைப்பு செய்வதற்கு 09.12.2024 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் எப்போது?
ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி சரத்து 14(9) படி இரண்டு மாதிரிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில், 18 நிறுவனங்களிடமிருந்து 30 பருப்பு மாதிரிகளும், 9 நிறுவனங்களிடமிருந்து 9 பாமாயில் மாதிரிகளும் தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டன. பருப்பு மாதிரி சமர்ப்பித்த நிறுவனங்களில் ஒன்றும் பாமாயில் மாதிரி சமர்ப்பித்த நிறுவணங்களில் ஒன்றும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பித்த இரு மாதிரிகளில் ஒன்றினைப் பகுப்பாய்விற்காக சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (NABL) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பி வைப்பதும் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்றவர்களின் இரண்டாவது மாதிரியினை மூன்று மாத காலத்திற்குப் வைத்திருப்பதென்பதும் நடைமுறையாகும்.
இவற்றில் முதல் மாதிரி பகுப்பாய்வில் தேர்ச்சி பெறாத நேர்வுகளில், இரண்டாவது மாதிரியினை ஆய்வகத்திற்குப் பகுப்பாய்விற்கு அனுப்பி அதில் கிடைக்கும் முடிவினையும் வைத்துப் பரிசீலனை செய்து இரண்டாவது மாதிரியிலும் தேர்ச்சி பெறாத நிறுவனத்தின் விலைப்புள்ளி திறக்கப்படமாட்டாது என்பதும் வழக்கத்திலுள்ள நடைமுறையாகும். பாதுகாப்பாக 09.12.2024 அன்று. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத நிறுவனங்களைத் தவிர்த்து 17 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பருப்பு வகை மாதிரிகள் மாதிரி எண் (Coding Number) குறிப்பிட்டு பகுப்பாய்விற்காக கிண்டியில் உள்ள NABL-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கும் அதே நாளில் 8 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பாமாயில் மாதிரிகள் மாதிரி எண் (Coding Number) குறிப்பிட்டு திருமழிசையில் உள்ள NABL ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
10:12.2024 அன்று பெறப்பட்ட பருப்பு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையில், பகுப்பாய்விற்காக அனுப்பிய 30 பருப்பு மாதிரிகளில், 24 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருந்ததாகவும் 6 மாதிரிகளில் மட்டும் சேதமடைந்த மற்றும் உடைந்த பருப்புகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக இருந்ததால் அவை உரிய தரத்தில் இல்லை ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மேற்கண்ட 6 மாதிரிகளின் தர ஆய்வு விவரங்கள் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் அக்மார்க் (AGMARK) நிர்ணயித்த வரம்பிற்குள் இருந்தன. ஆதலால் 6 நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது மாதிரிகள் மீண்டும் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டன.
தொழில் நுட்ப ஒப்பந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி முதலாவது மாதிரி உரிய தர நிபந்தனையினைப் பூர்த்தி செய்யவில்லையெனில், சிறிய அளவில் திரிபுகளிருப்பின் அதன் இரண்டாவது மாதிரியைப் பரிசீலித்து முடிவினை அறிவிப்பதென்பது வழக்கத்திலுள்ள நடைமுறையாகும். திரும்ப அனுப்பப்பட்ட ஆறு மாதிரிகளும் தர ஆய்வில் தேர்ச்சி பெற்றிருந்ததாக ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தர ஆய்வு அறிக்கை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு அதனடிப்படையில் விலைக்குறைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதில் பருப்பில் குறைவான விலைப்புள்ளி அளித்த 4 நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நான்கு நிறுவனங்களின் பருப்பு மாதிரிகள் முதல் பகுப்பாய்விலேயே தரமானவை என சான்று பெறப்பட்டவையாகும்.
இந்நிறுவனங்களின் பருப்புகள் தரமற்றவை என நிராகரிக்கப்பட்டவையல்ல. இந்நிறுவனங்கள் அனைத்துமே கடந்த காலங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குத் துவரம் பருப்பு வழங்கிய நிறுவனங்களாகும். மேலும் முதல் மாதிரியில் தரம் குறைந்ததாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் அளித்த விலைப்புள்ளிகளிலும் இந்த நான்கு நிறுவனங்கள் கொடுத்த விலைப்புள்ளியை விட அதிக விலைக் குறிப்பிடப்பட்டிருந்தன. பாமாயிலுக்கும் இதே நடைமுறையில் தகுதி பெற்ற எட்டு நிறுவனங்களும் தேர்ந்தோர் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு (Technically Qualified) அவற்றுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி விலையினைக் குறைத்து வழங்கிய நிறுவனங்களுக்குக் வழங்கப்பட்டன. பாமாயில் கொள்முதல் ஆணை பெற்ற 4 நிறுவனங்களுமே கடந்த காலங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு பாமாயில் வழங்கி வரும் நிறுவனங்களாகும்.
எனவே, மூன்று நிறுவனங்களின் பாமாயில் மாதிரிகள் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்திருப்பதும் பருப்பு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் இரு நிறுவனங்களின் மாதிரிகள் முதலில் நடந்த தர பரிசோதனையில் தேர்வாகவில்லை என்பதும் சட்டத்திற்கு விரோதமாக அவற்றுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதும் முற்றிலும் தவறானதாகும். தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டிருப்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ