மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் கட்டப்பட்ட ராணுவ வீரர்களுக்கான நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் மோடி பேசியதாவது:- வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாள், நம்முடைய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு ஆகும். ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர், கடலோர காவல் படையினர் தங்களது உயிரை தியாகம் செய்வதால் தான் நாம் அமைதியாக உறங்குகிறோம். ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும் தான் காட்டும். அதேபோல் தான் நம்முடைய ராணுவ மந்திரியும் பேச மாட்டார், அனைத்தையும் செயலில் காட்டுவார். மக்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது. உலகிலேயே இந்திய ராணுவம் மட்டும் தான் மக்களுக்காக பாடுபடுகிறது. ராணுவத்தின் முன் இந்தியர்கள் அனைவரும் சமம். ராணுவ வீரர்களின் சீருடை மற்றும் வீரம் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். அவர்கள் மனிதாபிமானத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஸ்ரீநகரில் வெள்ளப் பாதிப்பின் போது ராணுவ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் பேரிடரின் போது அவர்கள் ஆற்றிய தியாகத்தை நினைத்து பார்க்க வேண்டும். ஐ.நா. அமைதி பாதுகாப்புப் படைகளில் இந்தியா பெரிய பங்களிப்பை செலுத்தி வருகிறது. ஏமனில் இந்தியர்களுடன் சில பாகிஸ்தானியர்களையும் ராணுவத்தினர் மீட்டனர்.முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தில் முந்தையை அரசு வெற்று முழக்கங்களையே கூறி வந்தது. தற்போதைய அரசு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என அவர் கூறினார்.