இன்று, திங்கட் கிழமை ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. காலனித்துவ கால சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில், இந்திய நீதித்துறை சட்டம் (பாரதீய நியாய சன்ஹிதா), இந்திய குடிமக்கள் தற்காப்புச் சட்டம் (பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹ்தா) மற்றும் இந்திய ஆதார சட்டம் (பாரதீய சாட்சிய அதினியம்) ஆகியவை முறையே பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய ஆதார சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும்.
நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையை ஏற்படுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் நீதியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார், அதேசமயம் பிரிட்டிஷ் கால சட்டங்கள் தண்டனை நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்த நிலையில், ‘இந்தச் சட்டங்கள் இந்தியர்களால், இந்தியர்களுக்காக மற்றும் இந்திய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவை’ என்றார்.
புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள சில முக்கிய அம்சங்கள்
புதிய சட்டங்களின்படி, கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பு விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் கொடுக்கப்படும். முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
வழக்கை விசாரிப்பதில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி வழங்கவும் அதிகபட்சமாக 2 முறை வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் ஒத்திவைக்கலாம்.
இனிமேல் நீதிமன்ற அழைப்பாணைகள் மின்னணு முறையில் வழங்கப்படலாம். மேலும், வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிா்க்க, அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும். சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிய சட்டங்களின் கீழ், இப்போது எந்தவொரு நபரும் காவல் நிலையத்திற்குச் செல்லாமல் மின்னணு தகவல் தொடர்பு மூலம் புகார் செய்யலாம். இதன் மூலம் வழக்கு பதிவு செய்வது எளிதாக இருப்பதோடு, காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவான 2 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என புதிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன.
மேலும் படிக்க | ரயிலில் சாமான்களை பறி கொடுத்தவருக்கு ₹1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!
கற்பழிப்புக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் ஒரு பெண் போலீஸ் அதிகாரியால் அவரது பாதுகாவலர் அல்லது உறவினர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு 7 நாட்களுக்குள் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையை வாங்குவதும் விற்பதும் பெரும் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது. மைனரை கூட்டு பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
‘ஒவர்லேப்’ பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் 511 பிரிவுகளுக்கு மாறாக 358 பிரிவுகள் மட்டுமே இருக்கும்.
ஜீரோ எஃப்ஐஆர்' மூலம் எந்த ஒரு நபரும், அதன் அதிகார எல்லைக்குள் குற்றம் நடக்காவிட்டாலும், எந்த காவல் நிலையத்திலும் இப்போது எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இதன் மூலம் சட்ட நடவடிக்கைகள் தொடங்குவதில் ஏற்படும் காலதாமதம் நீங்கி, உடனடியாக வழக்கு பதிவு செய்ய முடியும்.
மேலும், காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் கைது விவரங்கள் எளிதில் கிடைக்கும். இதன் மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முக்கிய தகவல்களை எளிதில் பெற முடியும்.
புதிய சட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 2 மாதங்களில் விசாரணை முடிந்து விடும். புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் 90 நாட்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து புதுப்பிக்க உரிமை உண்டு.
புதிய சட்டங்களின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான மருத்துவ உதவியை உடனடியாகப் பெறுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.
சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும், சட்டச் செயல்பாட்டின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளும் சாட்சி பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதைப் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகின்றன.
மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ