அடுத்த ஆண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர்மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்பட்டன.
இதையடுத்து சில்லரை பிரச்சினையை தீர்க்க புதிய 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்பட்டன. 200 ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு ஏற்ப எந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் 200 ரூபாய் நோட்டுகள் இன்னும் சீரான புழக்கத்துக்கு வரவில்லை.
எனவே பணப்புழக்கத்தை சீராக்க புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியது:-
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும்.
அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்ரல் முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும்.
தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். அதன்பின், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், படிப்படியாக, அந்த ரூபாய் நோட்டுகள், 'வாபஸ்' பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.