கேரள சட்டப் பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தில் பாஜகவும் மற்றொரு இடத்தில் இதர கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்வு செய்யப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த அச்சுதானந்தன் அதிருப்தி அடைந்தார் அதுமட்டுமின்றி மாநிலக் குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். கேரளா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கததால் ஏமாற்றமடைந்துள்ளார். அவருக்கு தற்போது 93 வயதாகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தலில் 47 இடங்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இதனை அடுத்து முதல்வர் உம்மன் சாண்டி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சதாசிவத்திடம் இன்று காலை அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில் நாங்கள் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். ஆனாலும் "மக்களின் தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்வதாகவும்" உம்மன் சாண்டி கூறியுள்ளார்.