கார்த்தி சிதம்பரத்துக்கு, தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது.
இதற்கிடையே, தான் ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் எனக்கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.