புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக இளைஞரணித் தேசிய தலைவராக பூனம் மகாஜன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, கட்சியில் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.
எஸ்.சி. பிரிவு, எஸ்.டி. பிரிவு, ஓபிசி பிரிவு, விவசாயிகள் அணிக்கும் புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் மகளான பூனம் மகாஜன், கடந்த மக்களவைத் தேர்தலில்தான் வடக்கு மும்பை தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது அவருக்கு இளைஞரணித் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அப்பதவியில் 6 ஆண்டுகளுக்கு மேல் இருந்த அனுராக் தாக்குர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எஸ்.சி. பிரிவு தலைவராக உத்தரப் பிரதேசத்தின் கெளஷாம்பி தொகுதி எம்.பி. வினோத் சோன்ங்கர், எஸ்.டி. பிரிவு தலைவராக சத்தீஸ்கரைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ராம்விசார் நேதாம், விவசாயப் பிரிவு தலைவராக வீரேந்திர சிங், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக முன்னாள் எம்.பி. தாரா சிங் செளஹான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.