நேற்று (பிப்ரவரி 14) ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்த துயர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு உலகின் பல நாடுகளால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு உள்ள மசூத் அசார் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவந்திப்பூரா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் ஒரு முறை கடுமையானதாகி வருகிறது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக இருக்கும் அஜய் பிஸாரியாவை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளார். புல்வாமா தாக்குதலைக் குறித்து விவாதிக்க அஜய் பிஸாரியா டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.