பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
முன்னதாக தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல் போர் விமானம் வாங்குவது தான் உகந்தது என முந்தைய காங்கிரஸ் ஆட்சி முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்தியாவில் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும், அந்த நிறுவனத்துக்கு தஸால்ட் தாஜ்கள் தொழில்நுட்பத்தை வழங்கும் என முடிவு செய்து கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் தஸால்ட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பிறகு நடந்த பொதுதேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு மீண்டும் ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 36 ரபேல் விமானங்கள் பிரான்சிடம் இருந்து வாங்கப் போவதாக அறிவிக்கிறார். பின்னர் அடுத்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகிறார். ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
பழைய ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும் என கூறப்படிருந்தது. மேலும் ரஃபேல் போர் விமானம் வாங்குவது காங்கிரஸ் ஆட்சியில் சுமார் ரூ.590 கோடிக்கு போடப்பட்டது.
ஆனால் புதிய ஒப்பந்தத்தில் விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்சுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும் பாஜக ஆட்சியில் ரூ.1600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுதான் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
மத்திய எதிர்கட்சியான காங்கிரஸ், ரஃபேல் போர் விமான வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. விமான உற்பத்தியில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது? விமான உற்பத்தியில் அனுபவமிக்க அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ஏன் புறகணிக்கப் பட்டது? போன்ற கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனக் கூறிவருகிறது.
இதனையடுத்து பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.
சமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை அனில் அம்பானியின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளை மேற்கொள்ள சொன்னது. வேறு எந்த நிறுவனம் குறித்தும் எங்களுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே கூறிய வீடியோவை பகிர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்ப்படுத்தி உள்ளார்.
The sad truth about India's Commander in Thief. pic.twitter.com/USrxqlJTWe
— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2018